×

இந்திய நவீன வேதியியலின் தந்தை

ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ரே (1861 ஆக. 2 – 1944 ஜூன் 16)

இந்திய நவீன வேதியியலின் தந்தை என போற்றப்படும் பிரபுல்ல சந்திர ரே 1861ல் ஆகஸ்ட் மாதம் 2ம் நாள் மேற்கு வங்காளத்திலுள்ள குல்னா மாவட்டத்தில் (தற்போது வங்கதேசத்தில் உள்ளது) ராகுலி-காட்டிபரா என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஹரிஷ் சந்திர ரே ஒரு பண்ணையார். வடமொழி, பெர்சிய மொழி, ஆங்கிலம் மூன்றிலும் புலமை பெற்றவர். 1870ல் இவருடைய குடும்பம் கொல்கத்தாவிற்கு குடிபெயர்ந்து அங்கு சில ஆண்டுகள் ஹேர் பள்ளியில் படிப்பைத்தொடர்ந்தார் ரே. அப்போது இவருடைய உடல்நலம் குன்றி பள்ளிக்குச் செல்வது தடைப்பட்டபோதும் வீட்டில் இருந்த படியே தீவிரமாக படித்தார்.1874ல் ஆல்பர்ட் பள்ளியில் சேர்ந்தார். இவருடைய நுண்ணறிவு அங்குள்ள ஆசிரியர்களைக் கவர்ந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக தேர்வு எழுதாமல் இவர் பிறந்த கிராமத்திற்குச் செல்லவேண்டி வந்தது. பிறகு 1876ல் கொல்கொத்தா திரும்பி ஆல்பர்ட் பள்ளியிலேயே தன் படிப்பைத் தொடந்தார்.

1879ல் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று மெட்ரோ பாலிடன் நிலையத்தில் சேர்ந்தார். இதற்குள் இவருடைய குடும்பம் தங்களுடைய சொத்துக்களை இழந்து வறுமையின் பிடியில் சிக்கியது. மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றிபெற்று பிறகு மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, வேதியியலைப் பாடமாக எடுத்துக்கொண்டார். லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் போட்டித்தேர்வில் வெற்றி பெற்ற பிரபுல்ல சந்திரர் ‘ கில்கிரிஸ்ட் கல்வி உதவித் தொகை ‘ பெற்று இங்கிலாந்து சென்று எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இங்கும் வேதியியலில் ஆர்வம் செலுத்தினார்.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் பிளேக் நோயால் ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்தபோது ‘நமது நாட்டு மக்களின் நோயைச் சரிபடுத்த வெளிநாடுகளிலிருந்து பெரும் செலவில் ஏன் மருந்து வாங்க
வேண்டும்? மருந்து உற்பத்தியில் நாமே ஏன் ஈடுபடக் கூடாது?’ என்று கேட்டார் நமது நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ரே.அது மட்டுமல்ல, தனது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், நண்பர்களின் உதவியுடன் 1901ல் கொல்கத்தாவில் ‘பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபார்மாசூடிகல்ஸ்’ என்ற நிறுவனத்தை ரூ.700 முதலீட்டில் துவங்கிவிட்டார். இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனம் இதுவே. அதனால்தான், ‘இந்திய நவீன வேதியியலின் தந்தை’என்று இவர் போற்றப்படுகிறார்.

வேதியியல் விஞ்ஞானி, கல்வியாளர், மருந்து தயாரிப்பாளர், சுதந்திரப் போராட்ட வீரர், சீர்திருத்தவாதி, சமூக சேவகர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்டவர் ரே.1896ல் அவர் வெளியிட்ட பாதரச நைட்ரைடு (Mercurous Nitrite) சேர்மம் தொடர்பான ஆய்வறிக்கை அவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தது. 1916ல் தங்கம், பிளாட்டினம், இரிடியம் போன்ற தனிமங்களின் சல்பேட் சேர்மத்தை உருவாக்குவதிலும், அவற்றை மருந்து மூலக்கூறாக பயன்படுத்துவதிலும் வெற்றி பெற்றார். இது சரவாங்கி எனப்படும் முடக்குவாதத்துக்கு சிறந்த மருந்து ஒன்றும் கண்டறிந்தார்.இந்தியாவின் பண்டைய ரசாயன விஞ்ஞானியான ‘ரச ரத்னாகரா’நூலை எழுதிய நாகார்ஜுனா பெயரில் 1922ல் ஒரு விருதை உருவாக்கிய ரே, அதற்கு பெரும் தொகையை முதலீடாக்கி, வேதியியல் துறையில் சாதனை படைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து வழங்கச் செய்திருக்கிறார். 1919ல் இந்திய அரசாங்கம் இவரைப் பாராட்டி “Companion of the Indian Empire” என்ற பட்டத்தையும், பிறகு “சர்” என்ற பட்டத்தையும் கொடுத்து சிறப்பித்தது.இவருடைய கடுமையான உழைப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 1944 ஜூன் 16ல் இவர் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்தார்.

– சக்திவேல்

The post இந்திய நவீன வேதியியலின் தந்தை appeared first on Dinakaran.

Tags : Acharya Prabulla Chandra Ray ,
× RELATED ஈழத்தமிழர்க்கு நிரந்தரமான அரசியல்...